
கடந்த சில தினங்களாக பிரபல சமூக வலைதள பக்கங்களான யூடியூப் மற்றும் டிக்டாக் பயனாளர்களிடையே நடைபெற்று வரும் மோதல் டிக்டாக் செயலியின் மதிப்பீட்டை கடுமையாக பாதித்துள்ளது.
இந்தியாவில் ஏராளமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பலர் பிரபலமடைந்து, அதிலிருந்து திரையுலகம் வரை பல்வேறு வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு அடிமைப்பட்டு கிடப்பதாகவும், அநாகரீமாக நடந்துகொள்வதாகவும் ஏராளமான புகார்களும் ஒருபுறம் வந்த வண்ணம் உள்ளன.
இந்த செயலி மீது நீண்ட நாட்களாக பல விமர்சனங்கள் உள்ளன. இதனிடையே தற்போது இதில் இருந்து மற்றும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. பொதுவாக இந்த டிக்டாக் பயனாளர்களுக்கும், யூடியூப் பயனாளர்களுக்கும் இடையே விரோத போக்கு சமீப காலமாக நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் யூடியூப்பில் அதிக (subscribers) கொண்ட கேரிமினாட்டி என்ற நபர் சமீபத்தில் டிக்டாக் வீடியோக்களையும், அதை பதிவிடுபவர்களையும் மிகவும் கொச்சையாகவும் தகாத வார்த்தையில் பேசியும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த டிக்டாக் பயனாளர்கள் கேரிமினாட்டியை கண்டித்து அவர்களும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து இரு தரப்பினரும் கடுமையான வார்தை மோதல்களில் இறங்கியுள்ளனர்.
இதனை கண்ட யூட்யூப் நிறுவனம் உடனடியாக அந்த சர்ச்சைக்குறிய வீடியோவை நீக்கியுள்ளது. அந்த வீடியோ நீக்கப்பட்ட பிறகு டிக்டாக் செயலிக்கு எதிராக #bantiktok மற்றும் #bringbackcarryminati என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆக தொடங்கியது. மேலும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் எனவும் பல நெட்டிசன்களும் மீம்ஸ்களை போட்டு வருத்தெடுத்து வருகின்றனர்.
நெட்டிசன்களில் இந்த செயல் டிக்டாக் செயலியின் மதிப்பீட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை எழுவதற்கு முன்பாக கூகுள் பிளே ஸ்டோரில் 4.5 ஆக இருந்த டிக்டாக்கின் மதிப்பீடு தற்போது 2.0 ஆக குறைந்துள்ளது. இதனால் டிக்டாக் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் டிக்டாக்கின் இந்த வீழ்ச்சியை யூடியூப் பயனாளிகள் மீம்ஸ்களாக வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Source : News 7 Tamil
Rathiri Rounds Never Stop