சண்டிகர்: பஞ்சாபில் தேர்தலை காரணம் காட்டி மாநில காங்கிரஸ் அரசு இலவசங்களை அறிவிப்பதாக தெரிவித்துள்ள அக்கட்சி மாநில தலைவர் சித்து, முறையான திட்டமிடல் மூலமே மாநிலம் வளர்ச்சி பெறும். தந்திரங்கள் மூலம் வளர்ச்சி பெறாது எனவும் கூறியுள்ளார்.
அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் மோல் நிலவுகிறது. மாநில தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகினார். பின்னர், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றார். பின்னர், அதிகாரிகள் நியமனம் தொடர்பாகவும் மோதல் ஏற்பட்டது. மாநில தலைவர் பதவியில் இருந்து சித்து விலகினார். ஆனால், கட்சி மேலிடம் அவரை சமாதானப்படுத்தி, பதவியில் தொடர செய்தது. இருப்பினும், சித்துவுக்கும், முதல்வருக்கு இடையே மோதல் முடிந்தபாடில்லை. இது, தற்போது சித்து அளித்த பேட்டி உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியும், மின் கட்டணங்களை 3 சதவீதம் குறைத்தும் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்தார்.
இதனை விமர்சித்து, சண்டிகரில் நிருபர்களிடம் சித்து அளித்த பேட்டி: தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களுக்கு, ‘லாலிபாப்’களை மாநில அரசு வழங்கி வருகிறது. அதனை எப்படி தருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது? பொய் மற்றும் தவறான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடிப்பது சரியானதுதானா? முறையான திட்டமிடல் மூலமே மாநிலம் வளர்ச்சி பெறும்.
இலவசங்களை அறிவித்து, ஓட்டுகளை பெறும் தந்திரங்களை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியை மனதில் வைத்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மாநில அரசிற்கு ரூ.5 லட்சம்கோடி கடன் உள்ளது. இதனை அரசு திருப்பி செலுத்தும் என மக்கள் நினைத்தால், அது அவர்களின் தவறு. மக்கள் மீது தான் அந்த கடன் சுமத்தப்படும். மாநில அரசின் கஜானா நிரம்பி வழிந்தால், அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டியதுதானே? இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம், பஞ்சாபில் நிலவி வரும் கோஷ்டி மோதல் வெட்ட வெளிச்சமாகி உள்ளதுடன், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அதற்குள் பிரச்னையை தீர்வு கண்டு விடலாம் என்ற கட்சி மேலிடத்தின் நம்பிக்கைக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Rathiri Rounds Never Stop