
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அடுத்த 30 நாட்களில் கணிசமான முன்னேற்றத்திற்கு உறுதியளிக்காவிட்டால், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்துவதுடன், உறுப்பினராக நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை மறைத்ததாகவும், சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது குற்றம்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்பிற்கு அளிக்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தார். டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்திருந்தது. கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதலே வெளிப்படையாக இருந்து வருவதாக சீனாவும் கூறியிருந்தது.
முன்னதாக, கொரோனா தொற்றை கையாள்வதில் உலக சுகாதார நிறுவனம், மிகவும் சோகமான வேலையைச் செய்துள்ளது என்றும், அமெரிக்க நிதியுதவி குறித்து விரைவில் ஒரு முடிவை எடுப்பேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் முக்கிய மேம்பாடுகளுக்கு உறுதியளிக்கவில்லை என்றால், நான் உலக சுகாதார நிறுவனத்துக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட அமெரிக்காவின் நிதியை நிரந்தமாக்குவேன். உறுப்பினர் குறித்து மறுபரிசீலனை செய்வேன். சீனாவிடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிப்பது மட்டுமே ஐ.நா அமைப்புக்கு உள்ள ஒரே வழி. மேலும் நிர்வாக முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து ஏற்கனவே டெட்ராஸுடன் விவாதித்து வருகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தில் முதல்நாளான நேற்று, கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பாக, சுயாதீன விசாரணை விரைவில் துவங்குமென உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணைக்கு ஆதரவும், 2 பில்லியன் நிதியுதவி அளிப்பதாக சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks Dinamalar
Rathiri Rounds Never Stop