கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். அதைதொடர்ந்து மழை, வெள்ளம்; பாதிப்பு பகுதிகளில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டோம். இப்படி சோதனையான காலங்களில் கூட ஏராளமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது.

கடந்த 5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர்கள் மாநாடு. இரு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழில் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதற்கு நன்றி. இன்று மட்டும் ரூ.35,208 கோடி அளவில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 76,795 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் சாதித்ததாக சிலர் பேசினார்கள். இப்படியே சென்றால் தமிழகம் விரைவில் முதலிடத்தை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழகம் என்ற நிலையை உருவாக்குவதுதான் எனது லட்சியம்.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவோம்; அந்த இலக்கையும் தூரம் வெகுதொலைவில் இல்லை. தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும். மாநில தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கோவை மாவட்டம். வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும். கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை என்றாலே மக்களின் விருந்தோம்பலும், புதிய கண்டுபிடிப்புகளும் தான் நினைவுக்கு வருகிறது. கோவை மாவட்டத்தில் உருவாக்கப்படும் பொருள்களை கண்டு உலகமே வியந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறை முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74 ஆயிரத்து, 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வான்வெளி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

தொடர்ந்து, ரூ.13,413 கோடி முதலீட்டில் 13 புதிய திட்டங்களுக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சண்முக சுந்தரம், அதிகாரிகள் , டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் , பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிறுவன தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Rathiri Rounds Never Stop