மும்பை: டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற பின் ஹர்திக் பாண்டியா இந்தியா திரும்பிய நிலையில் துபாயில் இருந்து வாங்கி வந்த 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.
விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா அளித்துள்ள விளக்கம்: நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன். நான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தயாராக இருந்தேன். நான் எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அதை நான் செலுத்துவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளேன். எனது கடிகாரத்தின் விலை ரூ.5 கோடி என வதந்தி பரவி வருகிறது. ஆனால் தோராயமாக அதன் விலை ரூ.1.5 கோடியாகும். இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.
Rathiri Rounds Never Stop