சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக,
இன்று (அக்.,29): ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்.,30: தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முத் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் 12 செ.மீ., காரைக்கால் 10 செ.மீ., திருவாரூர் 8 செ.மீ., வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்
அக்.,29: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
அக்.,30, 31: மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி / பலத்த காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.
Rathiri Rounds Never Stop