பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை கோரியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய உதவித் தொகை திட்டத்தில் போலியான பயனாளர்களை இணைத்து பல கோடி ரூபாய் மோசடி நடைபெறுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஆதாரத்துடன் செய்தி ஒளிபரப்பானது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முறைகேடு நடந்தது முதற்கட்டமாக வேளாண் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீசார், 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்ததுடன், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை முடக்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் பணியாற்றிவந்த ராஜா என்ற தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாரமங்கலத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து பயனாளிகளை பதிவு செய்த தனியார் கணினி மையத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரியிலும் முறைகேடு நடந்ததை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, 42 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முறைகேடாக பயனடைந்த 1280 பேரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது, 14,000 பேரின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன.திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 1600 போலி பயனாளிகளுக்கு சுமார் 40 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கோடியே 70 லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியும் எனக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, இதுவரை 80 லட்ச ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல்
நாமக்கல்லில் 570 போலி கணக்குகள் கண்டறியப்பட்டு, சுமார் 23 லட்ச ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையில் 11,000 போலி பயனாளிகளுக்குச் சென்ற நிதியை திரும்ப பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேளாண் துறையில் தங்களுக்குக் கைப்பாவையாக உள்ள அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலமாக இந்த மோசடிகளை அதிமுக. அரசு தொடர்ச்சியாகச் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், பாஜக நிர்வாகிகள் மனு அளித்தனர். மேலும், அனைத்து மாவட்டங்களில் பாஜக விவசாய அணி சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
யாரெல்லாம் விவசாயிகள் அல்லாதோர் என மத்திய அரசு அனுப்பிய பட்டியலை வைத்து, அவர்களை நீக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக வேணாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் தெரிவித்துள்ளார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop