பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முதல் அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், 3-வது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.3 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.
கடந்த மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரங்குக்குள் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கப்பட்டு புரமோ ஷூட் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக வெண் தாடியுடன் கமல்ஹாசன் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தன.
இந்நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் என்ற அறிவிப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் புரமோ வீடியோவில், “நலமா? அன்றாடம் நாம் ஒருவரையொருவர் எதார்த்தமாக கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவியிருக்கும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. அமேசானில் தீப்பிடித்தால் இங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்குப் போகவில்லை என்றால் நம்மை நம்பி இருக்கிற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிடப் போகிற ஓட்டல், டீக்கடை, நமக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இப்படி சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருப்பவர்கள் 5 மாத காலங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தியபடி பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதேபோல் நீங்களும் வேலையைத் தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு. சரி இப்போது வேலையை ஆரம்பிக்கலாமா?” என்று கமல் கூற பிக்பாஸ் லோகோ இசையுடன் தோன்றுகிறது.
விரைவில் பிக்பாஸ் தமிழ் 4 சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop