Breaking News
Home / அரசியல் / மு.க.அழகிரியை இழுக்கும் அதிமுக..

மு.க.அழகிரியை இழுக்கும் அதிமுக..

மு.க.அழகிரி வாய் திறந்தால் திமுகவுக்குள் பூகம்பம் வெடிக்கும் என கருத்து தெரிவித்து எதிர் முகாமில் புயலைக் கிளப்பியுள்ளார் அமைச்ச்சர் ஆர்.பி.உதயகுமார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் இரு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி தொடர்ந்து வந்தாலும் இதிலிருந்து சில கட்சிகள் வெளியேறவும், சில கட்சிகள் இணையவும் வாய்ப்புகள் உள்ளன.

திமுக பொதுச்செயலாளர் யார்?

உறுதியாக கூட்டணியில் தொடரும் கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கவேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இனி வரும் காலங்களில் நடைபெறும். அதற்கு முன்னர் கட்சிகளுக்குள்ளேயே நடைபெறும் போட்டா போட்டிகள் தொடங்கியுள்ளன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து தொடங்கி சர்ச்சையைக் கிளப்பி தற்போதைக்கு முடித்துவைக்கப்பட்டாலும், எந்நேரம் வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் என்ற அளவிலேயே உள்ளது.

திமுகவில் அப்படியான கேள்விக்கே இடமில்லை என்றாலும், புதிதாக மற்றொரு விவாதத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்துள்ளார். நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவின் பொதுச்செயலாளர் பதவி இதுவரை நிரப்பப்படாதது ஏன்” என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “திமுகவில் தொண்டர்களை விட தலைவர்களே அதிகமாக உள்ளனர். மு.க.அழகிரி மௌனத்தை கலைத்தால், திமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்” என்று பேசியுள்ளார்.

 

அதிமுகவுக்குள் எப்போது எரிமலை வெடிக்கும் என்ற நிலை உள்ளபோது திமுகவுக்குள் பூகம்பம் வெடிக்கும் என அமைச்சர் கணிப்பது மேலும் சில விவாதங்களை கிளப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திமுகவிலிருந்து கருணாநிதி இருக்கும்போதே நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கட்சிக்குள் நுழையும் முயற்சியில் அப்போதே ஈடுபட்டாலும் அது பலனளிக்கவில்லை. கலைஞருக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைவராக பதவியேற்ற பின் அழகிரி கட்சிக்குள் வருவது மேலும் சிக்கலானாது.

 

கலைஞர் மேல் வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களில் முக்கியமானது குடும்ப அரசியல் செய்கிறார் என்பதே. ஸ்டாலின் குடும்பம், அழகிரி குடும்பம், கனிமொழி, மாறன் குடும்பம் ஆகியோரே கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனப் பரவலாக கூறப்பட்டது. கலைஞர் உடல்நிலை நலிவடைந்த போது செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே இந்த நிலை படிப்படியாக மாறியது. ஆனால் அது நேர்மறையான மாற்றமாக இல்லை என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

அதாவது திமுகவில் ஆதிக்கம் செலுத்திய அத்தனை குடும்பங்களும் ஓரங்கட்டப்பட்டு ஸ்டாலின் குடும்பம் மட்டும் ஆட்சி புரியும் இடமாக திமுக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஸ்டாலின், உதய நிதி, துர்கா, சபரீசன் ஆகிய நால்வரை மையமாகக் கொண்டே திமுக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

 

இதுஒருபுறமிருக்க மு.க.அழகிரியால் கட்சியை கைப்பற்ற முடியாத சூழலில் தன் பக்கம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டத்தை பல இடங்களில் நடத்தினார். அவர் எதிர்பார்த்த அளவு அவர் பக்கம் நிர்வாகிகளோ, அவ்வளவு நாள் அவரோடு இருந்தவர்களோகூட வரவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் திமுகவில் ஓரங்கட்டப்படும் நிலையில் அவரிடம் நெருக்கம் காட்ட திமுகவினரே தயாராக இல்லை.

ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் அழகிரி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றும், ஆதரவாளர்களைத் திரட்டப் போகிறார் என்றும், கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர்கூட வைத்துவிட்டார்கள் என்றும் சில தகவல்கள் பரப்பப்படுகின்றன.

 

திமுக எதிர்ப்பு அரசியலை மிகத் தீவிரமாக முன்னெடுத்துவரும் பாஜக, அதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கே பாஜகவின் நிர்பந்தம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அழகிரிக்கும் அவர்கள் அழைப்புவிடுக்க தயங்கவில்லை என்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பை அழகிரி ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கள் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் கிளம்பியுள்ள நிலையில் இதை எதிர்ப் பக்கம் திருப்பிவிடவே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகிரி விஷயத்தை போகிற போக்கில் வீசிச் சென்றுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

 

தொண்டர்களை, நிர்வாகிகளை, மக்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து கொண்டு செல்லவேண்டிய அரசியல் தமக்கு சரிவராது என்பதலோ என்னவோ அழகிரி மதுரை பண்ணைவீட்டில் ஓய்வில் இருக்கிறார். கட்சியும் ஸ்டாலினும் அவரிடம் நெருக்கம் பாராட்டாவிட்டாலும் கலைஞர் பிறந்த தினத்திலோ, நினைவு தினத்திலோ ஏன் நினைவிடத்தில் வந்து அவர் அஞ்சலி செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் அவரது முன்னாள் ஆதரவாளர்கள்.

 

Thanks to : samaiyam

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster