காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதத்தில் ராகுல் காந்தியின் கருத்து சீனியர் தலைவர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினிமா செய்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்காலிக தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழு அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எனக் கருதுவதாகக் கூறி குலாம் நபி ஆசாத் சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து காரிய கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று கூட்டியுள்ளார்.
டெல்லியில் சோனியா தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடெங்கிலும் உள்ள காரிய கமிட்டி உறுப்பினர்கள் காணொலி மூலம் பஙகேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்தி. சசி தரூர், பிரியங்கா காந்தி உள்ளி்ட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக சோனியா அல்லது ராகுலின் தலைமையையே தாங்கள் விரும்புவதாகக் கூறி பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சோனியா காந்திக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக வேண்டும் என ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கூறிவருவதாகவும், ராகுல் காந்தி தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும் என்று பல சீனியர் தலைவர்களும், சோனியா காந்தி மீண்டும் முழு நேர தலைவராக வேண்டும் என்று சில மூத்த தலைவர்களும் கூறி வருகின்றனர்.
கூட்டத்தில் அடுத்து தலைவராக விருப்பம் இல்லை என்று சோனியா காந்தி கூறியதோடு, காரிய கமிட்டியானது அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 23 சீனியர் தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், பாஜகவுக்கு உதவுவதாக கடித விவகாரம் அமைந்துள்ளது என கூறியதாக தகவல்கள் வெளியாகின.
Rathiri Rounds Never Stop