சென்னை:
ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் சென்னையில் உள்ள மொத்த பாதிப்பில் 85 சதவீதம் பேர் உள்ளனர்.
ராயபுரம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 6.34 லட்சமாக உள்ளது. குறுகலான சாலை மற்றும் சிறிய இடத்தில் அதிக அளவிலான வீடுகள் இருப்பதன் காரணமாக அவர்களால் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளிகள் ஆவர். அவர்கள் கொரோனா பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர்.
ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 53 இடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் வெளியே செல்லவும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் கொரோனாவின் வீரியம் தெரியாமல் வெளியே சுற்றுவதாக அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் கொரோனா பரவலை ராயபுரம் மண்டலத்தில் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
திரு.வி.க நகர் மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க. நகர், பெரவள்ளுர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. டெல்லி சென்று வந்த ஒருவரின் மனைவி உட்பட3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியில் கடந்த 25-ந்தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேருக்கும், 27-ந் தேதி 11 பேருக்கும், 28-ந்தேதி 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தவிர புளியந்தோப்பின் பல்வேறு பகுதிகளில் மேலும் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் லாரிகள் டிரைவர்கள் ஆவர். சில இடங்களில் தன்னார்வலர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாமல் களப்பணியில் ஈடுபட்டதாலேயே இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தப்பி வந்த கொரோனா நோயாளி ஒருவர் பிடிக்க சென்ற போலீசாரை கட்டி பிடித்து விடுவதாக மிரட்டினார். அந்த அளவுக்கே புளியந்தோப்பு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி பெரும்பாலானோர் சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாக சேர்ந்து கேரம் போர்டு, பல்லாங்குழி விளையாடுவது, மொட்டை மாடியில் கூட்டமாக அமர்ந்து விருந்து உண்பது என்று பொழுதை போக்கி வருகின்றனர். போலீசார் எச்சரிக்கும் சமயத்தில் அங்கிருந்து நழுவி சென்று அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கூட்டம் கூட்டமாக இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
Rathiri Rounds Never Stop