திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை நிவாரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கு மூலமாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் 47,174 பேரும், அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 4,846 பேரும், மேலும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் 4,751 பேர் என மொத்தம் 56,771 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை நிவாரண உதவித்தொகையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.11 கோடியே 35 லட்சத்து 42 ஆயிரம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் தொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
தொழிலாளர்கள் கூட்டமாக சென்று பொருட்கள் பெறுவதனை தவிர்த்திடும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியினை கடைபிடித்து ரேசன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
Rathiri Rounds Never Stop