Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தேனி / தேனி அருகே மதுவிற்றதாக ஒரே நாளில் 18 பேர் கைது

தேனி அருகே மதுவிற்றதாக ஒரே நாளில் 18 பேர் கைது

தேனி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்களும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் மதுபான கடைகள் மூடுவதற்கு முன்பே மொத்தமாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துவிட்டனர்.

இவ்வாறு பதுக்கி வைத்த மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில நாட்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். முதல் 4 நாட்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அமோகமாக நடந்து வந்தது. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடாங்கிபட்டி அருகே ஒரு தோட்டத்தில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுவிற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு பகுதியில் கழிப்பிடம் அருகில் மதுவிற்பனை செய்த  முருகன் (47) என்பவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வீரபாண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக உத்தமபாளையம், சின்னமனூரில் தலா 3 பேர், ராஜதானி, ஆண்டிப்பட்டி பகுதியில் தலா 2 பேர், க.விலக்கு, கூடலூர், கண்டமனூர், ராயப்பன்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 163 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

About Admin

Check Also

அண்ணனா..!!!? தம்பியா..!!!? மோதிக்கொள்ளும் சகோதரர்கள்……!!

அண்ணன் திமுக, தம்பி அதிமுக: ஆண்டிபட்டியில் 2வது முறையாக மோதிக் கொள்ளும் சகோதர வேட்பாளர்கள்..!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster