கோவை,
இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் மத்திய அரசு அலுவலகங்களில் மொத்தம் உள்ள ஊழியர்களில் 50 சதவீத பேர் ஒருவாரம் பணியாற்ற வேண்டும் என்றும், மீதியுள்ள 50 சதவீதம் பேர் விடுமுறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி வருமான வரி அலுவலகம், வங்கிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள போலீசாரில் மூன்றில் ஒரு பங்கு போலீசார் 7 நாட்கள் விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் மீதி 2 பங்கு போலீசார் பணியில் இருக்க வேண்டும் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு போலீஸ் நிலையத்தில் மொத்தம் உள்ள போலீசாரில் 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 900 போலீசாரும் பணியில் உள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டது. மீதி 2 பங்கு போலீசார் இதுவரை பணியில் இருந்தனர்.
இந்த நிலையில் முதல் சுற்றில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய கோவை மாநகர மற்றும் புறநகர் போலீசார் 700 பேருக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான சளி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கிறதா? என்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் ஒவ்வொருவருக்கும் தெர்மல் ஸ்கேன் மூலம் காய்ச்சல் இருக்கிறதா? என்றும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனை முடிவில், பணியாற்ற தகுதி இருக்கிறது என்று டாக்டர்கள் சான்றிதழ் அளித்த போலீசார் மட்டும் நேற்று பணியில் சேர்ந்தனர்.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த போலீசார் பணியில் சேருவதற்கு முன்பு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் சுற்றில் விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்ததும் அடுத்த சுற்றில் உள்ளவர்கள் விடுமுறையில் செல்வார்கள்.
ஒரு போலீஸ் நிலையத்தில் மொத்தம் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு போலீசார் விடுமுறையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொரோனா பரவ தொடங்கியதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி போலீசார் படிப்படியாக விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள். இது போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் ஏட்டு வரை பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
Rathiri Rounds Never Stop