திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். தினமும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இங்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பதிலாக வியாபாரிகளுக்கு காட்டன் மார்க்கெட் பகுதியில் இடம் ஒதுக்கி உள்ளனர்.
ஆனால் இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் கடைகளை இடிக்க கூடாது. எங்களுக்கு இங்கேயே கடை ஒதுக்க வேண்டும். வேறு இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம் என கூறி வியாபாரிகள் தொடர் உண்ணாவிரதம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் தினசரி மார்க்கெட்டுக்கு வந்து கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தலைமையில் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் தங்கள் சட்டைகளை கழட்டி சாலையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடைகளை இடிக்க கூடாது, எங்களுக்கு இங்கேயே கடை ஒதுக்க வேண்டும் மற்றும் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் பணியை நிறுத்தினர். வியாபாரிகள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Rathiri Rounds Never Stop