திருவள்ளூர், மார்ச் 17–
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆகிய துறைகள் சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளான கை கழுவும் முறை விளக்குவது, கிருமி நாசினிகளை தெளிப்பது உள்ளிட்டவைகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:–
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் அனைத்துத் துறைகளான பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, அறநிலையங்கள் ஆகிய துறைகளின் வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளான மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்ட பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் சுற்றறிக்கையில் எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லைப்பகுதிகளில் 5 வட்டங்களில் 12 திரையரங்குகள் மூடப்பட்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி., மற்றும் 1-–ம் வகுப்பு முதல் 5–-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31, 2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று திருவள்ளூர் மாவட்ட எல்லைப்பகுதிகளான பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி முதலிய வட்டாரங்களில் மாநில எல்லையோரப் பகுதிகளில் 14 இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்காணிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்முகாம்களில் 1501 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எவருமில்லை.
மேலும், இன்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆகிய துறைகள் சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளான கை கழுவும் முறை விளக்குவது, கிருமி நாசினிகளை தெளிப்பது உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பொதுமக்கள் அனைவரும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கைகளை சோப்பு உள்ளிட்ட கிருமி நாசினிகள் மூலமாக நன்கு சுத்தம் செய்து, நோய் தொற்றுலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.
இவ்வாய்வில் துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) ஜவஹர்லால் (திருவள்ளூர்), பிரபாகரன் (பூவிருந்தவல்லி), திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Rathiri Rounds Never Stop