தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில்,ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 27ஆம் தேதி, ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 156 ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று, 27 மாவட்டங்களில், 158 ஊராட்சி ஒன்றியங்களில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து மீதமுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 585 வாக்கு சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 898 பதவிகளுக்கான தேர்தலில், 2 ஆயிரத்து 467 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 267 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புங்கார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராஜா நகர் பகுதியில், வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தும், யாரும் வாக்களிக்க வரவில்லை. பல ஆண்டுகாலமாக வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தும், இதுவரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், வாக்குப்பதிவில் பங்கேற்வில்லை என பொதுமக்கள் கூறியிருக்கின்றனர். இதனால், முத்துராஜா நகர் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இருப்பினும், ஆறுதல் அளிக்கும் வகையில், 27 வாக்குகள் உள்ள நந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களில், 7 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர்.
14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 919 வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 989 பதவியிடங்களுக்கான தேர்தலில், 3 ஆயிரத்து 959 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 899 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கோவை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 27ம் தேதி நடைபெற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தலில், 77.23 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக 415 வாக்குப்பதிவு மையங்களும், அவற்றின் கீழ் 878 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 214 பதவிகளுக்கான தேர்தலில், 4 ஆயிரத்து 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில், 73.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து மீதமுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக ஆயிரத்து 114 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 175 பதவிகளுக்கான தேர்தலில், 4 ஆயிரத்து 397 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 863 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள வடபுதுப்பட்டி முத்தாலம்மன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே ஒட்டப்பட்டுள்ள சின்னங்கள் குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டது. வடபுதுப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சரவணக்குமாருக்கான உதயசூரியன் சின்னம், மாதிரி வாக்குச்சீட்டில், முதலிடத்தில் உள்ளது. ஆனால், வாக்குச்சீட்டில், இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுபற்றி, அங்கு வந்த தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்-விடம் சரவணக்குமார் முறையிட்டார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 781 வாக்குச்சாவடி மையங்களில் 181 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்து 265 பதவிகளுக்கான தேர்தலில், 3 ஆயிரத்து 004 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 76.8 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 996 வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 650 பதவியிடங்களுக்கான தேர்தலில், 4 ஆயிரத்து 022 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 73.4 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 856 வாக்கு சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 850 பதவிகளுக்கான தேர்தலில், 3 ஆயிரத்து 353 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 4 லட்சத்து ஆயிரத்து 786 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலையூர் பகுதியில், வேட்பாளர்கள், மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், வரிசையாக அமர்ந்து வாக்காளர்களிடம் சின்னங்களை காண்பித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என 30க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது ஆதாரவாளர்கள், வாக்குச்சாவடியிலிருந்து, 100 மீட்டருக்கு அப்பால், வரிசையாக நாற்காலிகள் போட்டு அமர்ந்து, பதாகைகளில் சின்னங்களை ஒட்டி, வாக்காளர்களிடம் காண்பித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி முதற்கட்டமாக 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 82.82 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஆயிரத்து 590 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 745 பதவியிடங்களுக்கான தேர்தலில், 6 ஆயிரத்து 303 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 951 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
Rathiri Rounds Never Stop