புதுடில்லி: :’பெகாசஸ்’ போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதற்காக, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ‘இந்த விவகாரத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், பெகாசஸ் மென்பொருளை சட்ட விரோதமாக மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ‘இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்வது தேச நலனுக்கு நன்மை அளிக்காது. ‘எனவே அறிக்கை தாக்கல் செய்ய விரும்பவில்லை. நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கிறோம்’ என, தெரிவித்தது.
விசாரணை

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படும்.’தனி அதிகாரம் படைத்த அமைப்பு விசாரணை நடத்துவது குறித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது.
தனிநபர் உரிமை முக்கியம்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கிய இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பெகாசஸ் விவகாரத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. குடிமக்களின் தனிநபர் உரிமையும் முக்கியம். தொழில்நுட்ப காலத்தில் அதனை பாதுகாப்பதும் முக்கியம். தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியமோ அதேயளவு தனிநபர் உரிமையும் பாதுகாப்பது அவசியம். தேசநலன் எனக்கூறி, தனிநபர் உரிமையை பறிக்கக்கூடாது.
நீதிமன்றம் கண்காணிக்கும்
இந்த விவகாரத்தில், மத்திய அரசு குறிப்பிட்டு எதையும் மறுக்கவில்லை. இதனால், மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால், புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதனை, உச்சநீதிமன்றம் கண்காணிக்கும். புகாரில் உள்ள பொய்யை விசாரிக்கவும், உண்மையை கண்டறியவும் இந்த குழு அமைக்கப்படுகிறது. சிறந்த நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான இந்த குழுவில், அலோக் ஜோஷி, சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என உத்தரவிட்டு, வழக்கை 8 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Rathiri Rounds Never Stop