
சென்னை:தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் செல்வோர், அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை, நவ., 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த நாள் வெள்ளியன்று விடுமுறை பெற்றால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.இதன் காரணமாக தீபாவளியை கொண்டாட, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். தென் மாவட்டங்களுக்கான ரயில்களில், முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.
அரசு பஸ்களில் பயணிக்க, 30 நாட்களுக்கு முன் முன்பதிவு துவங்கியது. என்றாலும் சென்னையில் இருந்து, வெளியூர் செல்ல 26 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில், முன்பதிவு துவங்கிய 10 நாட்களுக்குள் வழக்கமான பஸ்களுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்துவிடும். பின், சிறப்பு பஸ்களுக்கு தான் முன்பதிவு நடக்கும்.
ஆனால், இந்தாண்டு பயணியர் முன்பதிவில் ஆர்வம் காட்டாதது, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், சிறப்பு பஸ்களை இயக்குவதில் உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:இந்தாண்டு நவ., 1ல், எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது, சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோருக்கு பின்னடைவை தந்துள்ளது. நவ., 8ல் வகுப்புகள் செயல்படும் என அறிவித்தால், பலரும் சொந்த ஊர் சென்று நிம்மதியாக திரும்புவர். முன்பதிவு மந்தமானதற்கு பள்ளி திறப்பு மட்டும் காரணமில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் அவகாசம் இருப்பதால், இனி வரும் நாட்களில், அதிகளவில் முன்பதிவு நடக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-Source Dinamalar
Rathiri Rounds Never Stop