ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா

*சேலத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேட்டி
சேலம் : தர்மபுரியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு தலைமை வகித்த, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, 66 கைத்தறி நெசவாளர்களுக்கு ₹41.60 லட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, சேலத்தில் உள்ள காதி கிராப்ட் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அமைச்சர் காந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கைத்தறி ஆடைகள் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இந்த துறையை எந்த அமைச்சரும் ஆய்வு செய்யவில்லை. எனவே, துறையில் என்ன குறை உள்ளது, அதற்கான தீர்வு மற்றும் மேம்படுத்துவதற்காக ஆய்வு செய்யப்படுகிறது.
₹15 கோடிக்கு விற்பனை நடந்து வந்த சேலம் கோ-ஆப்டெக்ஸில், தற்போது கொரோனாவால் விற்பனை சரிந்துள்ளது. இதனை ₹30 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆர்கானிக் ரகங்களை ஊக்குவிப்பதுடன், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்து நெசவாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். குறைவாக உள்ள அவர்களின் ஊதியத்தை அதிகப்படுத்துவதுடன், 365 நாளும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டு விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் காரணம். இதனை ஒன்றிய அரசு தான் குறைக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தற்போது நடைபெறுவது திமுக ஆட்சி அல்ல. மக்களின் ஆட்சி. தமிழகத்தில் 8 இடங்களில் ஜவுளி பூங்கா அமைகிறது. அத்துடன் தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில், 1,000 ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எப்போதுமே திமுக ஆட்சியின் போது தான், தொழில்துறை வளர்ச்சி அடையும். கடந்த ஆட்சியின் குறைகளை கூறாமல், நமது ஆட்சியின் இத்திட்டங்களை நிறைவாகச் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே இயங்கும் பல ெநசவாளர்கள் சங்கங்களின் பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலி சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோ-ஆப்டெக்ஸை மேம்படுத்த, ஆன்லைன் விற்பனை, தனி பிராண்டிங் ஏற்படுத்துதல் என நிறைய திட்டங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார். அப்போது, மாநகர திமுக செயலாளர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Rathiri Rounds Never Stop