Breaking News
Home / கொரோனா / கொரோனா பரவலால் தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்

கொரோனா பரவலால் தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்

கொரோனா பரவலால் தமிழகத்தில் தேர்தல் நடக்குமா என எழுந்துள்ள சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்..!!

சென்னை,
சென்னை அரசு தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
சில மாவட்டங்களில் பறக்கும்படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. செலவின பார்வையாளர்கள் வந்துள்ளதால், சில இடங்களில் கூடுதல் பறக்கும்படை தேவைப்படலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பரிந்துரைத்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் பறக்கும்படையின் எண்ணிக்கை சில இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது.
நத்தம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதை பெற்ற பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.
தேர்தல் நடக்குமா?
தமிழகத்தில் தேர்தல் நடக்குமா என்ற ஒரு சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பதாக கூறுகிறீர்கள்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பீகாரில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அப்போது அங்கு நாளொன்றுக்கு தொற்று விகிதம் 12 ஆயிரமாக இருந்தது. ஆனால் நமக்கு 900-க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. இதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு தகவல் அளிக்கும்.
மேலும், தேர்தலின் போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை அரசு வழங்கும். அதை நாங்கள் அமல்படுத்துவோம். ஆனால் தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்ற அளவிற்கு எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.
அரசு நடவடிக்கை
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சித் தலைவர்களே முககவசம் அணியாமல் இருக்கிறார்களே, எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லையே என்று கூறுகிறீர்கள். ஆனால் முககவசம் அணியாதவர்களிடம் அரசு அபராதம் வசூலிப்பதாக செய்திகள் வருகின்றன.
இதுபோன்ற விதிமுறைகளை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை ஆகியவை அமல்படுத்துகின்றன. எனவே இதிலுள்ள விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை அந்த துறைகள் மேற்கொள்ளும். தேர்தல் ஆணையம் எந்த உத்தரவுகளையும் இதில் பிறப்பிப்பதில்லை. ஆனால் கொரோனா பரவல் பற்றி தினமும் சுகாதாரத் துறையிடம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அவதூறு பிரசாரம்
கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அரசியல் கூட்டங்களை பரந்து விரிந்துள்ள இடங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தி இருக்கிறோம். இதில் தனிப்பட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் மக்கள் கூடும்போது, அதில் கொரோனா பரவல் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால், வேட்பாளர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக புகார்கள் எதுவும் என்னிடம் வரவில்லை. சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் அவதூறான தகவல் கூறப்படுவதாக அரசியல் கட்சிகள் புகார் அளிக்கின்றன. அது மிகப்பெரிய களம். எனவே அங்கு பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணிப்பதில்லை. புகார் கூறப்படும் விவகாரங்களை மட்டும் கவனிப்போம்.
பணப்பட்டுவாடா புகார்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் குற்றம் தொடர்பாக 2 விதமான விசாரணை நடைபெறும். ஒன்று, கோர்ட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்படும். மற்ற குற்றங்கள் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் கால அளவை நிர்ணயித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். எந்த பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதில் உடனடியாக முடிவு எடுக்கப்படும்.
பணப்பட்டுவாடா தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் பல புகார்கள் வருகின்றன. இதுவரை 51 புகார்கள் வந்துள்ளன. அதில் 20 புகார்கள் சரியானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் மீது மேல் விசாரணை நடைபெறுகிறது. 31 புகார்களில் உண்மை இல்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 1,291 புகார்களில் கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகமான புகார்கள் (315) வந்துள்ளன. போஸ்டர் ஒட்டுவது, அச்சிடுவோர் தகவல் இல்லாமல் போஸ்டர் அடிப்பது, மதத் தூண்டுதல் பேச்சு, மிரட்டல், துப்பாக்கி இருப்பதாக காட்டுவது, ஊர்வலத்திற்காக மக்களை அழைத்து வருவது, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்வது. அனுமதி பெறாத வாகனங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது உள்பட பல புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
விதிமீறல் புகார்கள் மீது நடவடிக்கை
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதன் குற்றத்தன்மையை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். குற்றத்தின் தன்மை கடுமையாக இருக்கும்பட்சத்தில் தேர்தலை அந்த இடங்களில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா இடத்திலும் தேர்தல் நிறுத்தப்படாது.
எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி வருமான வரித்துறை, காவல் துறை உள்ளிட்ட துறையினர் கொடுக்கும் தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் அளிப்போம். அதனடிப்படையில் ஆணையம் முடிவுகளை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to Daily Thanthi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster