சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் படுகாயம்..!!
விருதுநகர்: சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் அறையில் இருந்து திடீரென பட்டாசுகள் வெடித்தன.
இதில் ஒரு அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உள்பட 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தொழிலாளர்களின் உறவினர்கள் கூடியுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Thanks to Dailyhunt
Rathiri Rounds Never Stop