கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசனின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் வித்தியாசமான ஸ்டைலான லுக்கில் தோன்றியுள்ளார். லோகேஷ் கனகராஜ் – கமல் கூட்டணி இணைந்திருப்பதாலும் ‘விக்ரம்’ படத்தின் ஸ்டைலான டீசர் காட்சிகளாலும் இப்போதிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் 232-வது படமான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop