மேட்டூர் அணை வரலாற்றில் 67-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
சேலம் : மேட்டூர் அணை வரலாற்றில், 67-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அடுத்த இரு தினங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சரியத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு நேற்று விநாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இது, மேலும் அதிகரித்து இன்று (அக். 13) காலையில், விநாடிக்கு 27ஆயிரத்து 212 கன அடியாக உயர்ந்தது.
நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 99.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 67-வது முறையாகவும், நடப்பாண்டில் 2வது முறையாகவும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதனால், சேலம், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி விட்ட நிலையில் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு இன்று குறைக்கப்பட்டது.டெல்டா பாசனத்துக்கு இன்று காலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர்த்திறக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 900 கன அடி நீர்திறக்கப்படுகிறது. நேற்று 63.69 டிஎம்சியாக இருந்த அணையின் நீர் இருப்பு, இன்று 64.71 டிஎம்சியாக அதிகரித்துக் காணப்பட்டது.
Thanks to : Dinakaran
Rathiri Rounds Never Stop