மீராமிதுன் சர்ச்சை தொடர்பாக ரசிகர்களிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூர்யா, இயக்குநர் பாரதிராஜாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கும் மீராமிதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் அறிந்த நபராக மாறினார்.
சமீபத்தில் சமூகவலைதள பக்கத்தில் விஜய், சூர்யாவைப் பற்றி மீராமிதுன் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து அவதூறு பேசியதாக பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாக பேசிவரும் நடிகை மீராமிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் சூர்யா கடந்த 2018-ம் ஆண்டு ட்வீட் செய்த கருத்தை ரீட்வீட் செய்துள்ளார்.
சூர்யாவின் ட்விட்டர் பதிவில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்று கூறியுள்ளார்.
இதேகருத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாகவும் இந்த விவகாரத்தில் நேற்று அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் சூர்யா, “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!
திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !! அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.
திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.
மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.” இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop