ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் : முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நலம் விசாரிப்பு!!
சென்னை : ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி காந்த் நேற்று காலை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. டாக்டர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவரது ரத்த அழுத்தமும், உடல்நிலையும் சீராக உள்ளது. ஆனாலும் அவரை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி இன்று மாலை டாக்டர்கள் குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
இந்த நிலையில், முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.
Thanks to Dinakaran
Rathiri Rounds Never Stop