Sunday , October 17 2021
Breaking News
Home / அரசியல் / தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை தி.மு.க., வெற்றிப்பெற்றது. 2 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க., வென்றது. அதேபோல், 1,381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ஆயிரம் இடங்களுக்கு மேல் தி.மு.க., கைப்பற்றியது. பல இடங்களில் அ.தி.மு.க.,வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

latest tamil news

அராஜகத்தின் அத்தியாயம் தி.மு.க., நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் இரு சட்டசபை தேர்தல்கள், இரு லோக்சபா தேர்தல்கள், இரு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சி தேர்தலை தி.மு.க., அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. தி.மு.க., அரசும், தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.

ஓட்டுப்பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தும், உரிய நடவடிக்கையை எடுக்க தவறியிருக்கிறது. பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மிகவும் தாமதமாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தி இருக்கிறார்கள். பல இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்புக் காட்டவில்லை. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.

latest tamil news

இதுபோன்ற ஜனநாயகப் படுகொலை தி.மு.க., நடத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்ததால், அ.தி.மு.க., சட்ட ஆலோசனைக் குழு மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறோம். இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்த தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

About Admin

Check Also

உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster