சென்னை: திமுக.,வினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி, ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார், தலைமை தேர்தல் அதிகாரியிடும் புகார் அளித்தார்.இது தொடர்பாக சென்னையில் தமிழக தலைமை அதிகாரி அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் புகாரளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கொலை செய்து ஓட்டு வாங்கிய ‘திருமங்கலம் பார்முலா’வை தான் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் செய்கிறது. அதிமுக.,வின் வெற்றியை பறிக்கும் விதமாக பணத்தை கொடுத்து ஓட்டை பெறுகின்றனர். தேர்தல் ஆணையம் நியாயமாகவும், சுதந்திரமாகவும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக நவீன முறையில் ‘கூகுள் பே’ மூலமாக பணத்தை பட்டுவாடா செய்கின்றனர். குறிப்பிட்ட 5 தொகுதிகளிலும் திமுக.,வினர் பணப்பட்டுவாடா செய்வதற்காக அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால், திமுக.,வின் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்டாலினின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
