தி.மு.க.,வின் அத்தியாயம் முடியும் என்கிறார் 
சோளிங்கர்: ”சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வின் அத்தியாயம் முடிந்துவிடும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து, நெமிலியில் நேற்று அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி இருக்காது. பெரிய மாவட்டமாக வேலுார் இருப்பதால், அதை பிரிக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கையை, முதல்வர் நிறைவேற்றினார். பா.ம.க., எடுத்துரைத்த கோரிக்கைகளை எல்லாம், அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை அமுதசுரபி. பா.ம.க., தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், எதையும் நிறைவேற்ற முடியாது. இந்த தேர்தலுக்கு பின், தி.மு.க., வின் அத்தியாயம் முடிந்து விடும். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமையும். அதில், எந்த மாற்றமும் இல்லை. அப்போது மருத்துவம், கல்வி இலவசமாக கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிர்வாகிகளுக்கு ‘டோஸ்’ வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வேலழகன் போட்டியிடுகிறார். ஆனால், கூட்டணியில் உள்ள, பா.ம.க.,வினர், அவருக்கு எதிராக, உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலழகன் எங்கு சென்றாலும், என்ன பேசினாலும், எதிரணியில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடுகிறது. இது குறித்து, பா.ம.க., மேலிடத்திற்கு, அ.தி.மு.க., தலைமை தகவல் அனுப்பியது.உள்ளடி வேலையில் ஈடுபட்ட, பா.ம.க., நிர்வாகிகளை வேலுாருக்கு வரவழைத்து, ராமதாஸ், ‘டோஸ்’ விட்டார். அப்போது, ‘ஆளுங்கட்சி வேட்பாளர் வேலழகனும், வன்னியர் தான். அவர் வெற்றி பெற்றே ஆக வேண்டும். கடந்த தேர்தலில் செய்தது போல உள்குத்து வேலையில் ஈடுபட்டால், கட்சியை விட்டே நீக்கி விடுவேன்’ என, எச்சரித்து அனுப்பினார். Thanks toDailyhunt