கூட்டணியில் இணைய அமமுக வந்தால் வரவேற்போம்: கமல் பேட்டி..!!
கூட்டணியில் இணைய அமமுக வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கதவுகள் திறந்திருக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் விலகி, மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக, நேற்று (பிப். 26) இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில், சரத்குமார், ஐஜேகே துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர், இன்று (பிப். 27) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பில் தங்கள் கூட்டணியில் இணையுமாறு, கமலுக்கு சரத்குமார் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சரத்குமார் கூட்டணி தொடர்பாக உங்களைச் சந்தித்துள்ளார். வேறு எந்தெந்தக் கட்சிகள் உங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறது?
வாய்ப்பிருக்கிறது என்பது ஊகம். நடந்து முடிந்தபின் சொல்வது செய்தி. அதை சொல்லத்தான் நான் ஆவலாக இருக்கிறேன். மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. விரைவில் நல்மழை பெய்யும்.
டிடிவி தினகரன் உங்களுடன் இணைவாரா?
பார்ப்போம். இணைந்தவுடன் உங்களிடம் சொல்லாமல் நான் செயல்படவே மாட்டேன்.
நீங்கள் அழைப்பு விடுத்தீர்களா?
இல்லை. நாங்கள் புதிய கட்சி. வெற்றியை நோக்கி நடைபோடும் வேகத்தில் இருக்கிறோம். அமமுக வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கும் ஒரு கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும். கதவுகள் திறந்திருக்கின்றன.
ரஜினியைச் சந்தித்து ஆதரவு கோரியிருந்தீர்களே?
நான் சந்தித்துப் பேசியது என்னவென்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நண்பர்களாகப் பேசிக் கொண்டோம். மார்ச் 3-ம் தேதியிலிருந்துதான் பிறரிடம் ஆதரவு கேட்கப் போகிறோம்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
Thanks to Dailyhunt