வேலூர், குடியாத்தத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது..!!
வேலூர்
வேலூரை அடுத்த கோவிந்தரெட்டிப்பாளையத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக நேற்று முன்தினம் மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்தன. அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர்கள், அரியூர் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர்.
அதில், 16 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதையடுத்து அந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்கவேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர்.
இதேபோல் குடியாத்தம் அருகே உள்ள உள்ளி மற்றும் ஹைதர்புரத்தில் வருகிற 25-ந் தேதி நடைபெற இருந்த 2 சிறுமிகள் திருமணத்தையும் சைல்டு லைன் அலுவலர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர். 3 சிறுமிகளும் ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thanks to Daily Thanthi