Breaking News
Home / அரசியல் / அதிமுக வாக்குகளை பிரிக்க சசிகலா திட்டம் : திமுகவை வெற்றிபெற வைக்க தினகரன் முயற்சி!!

அதிமுக வாக்குகளை பிரிக்க சசிகலா திட்டம் : திமுகவை வெற்றிபெற வைக்க தினகரன் முயற்சி!!

அதிமுக வாக்குகளை பிரிக்க சசிகலா திட்டம் : திமுகவை வெற்றிபெற வைக்க தினகரன் முயற்சி..!!

சென்னை: பொது எதிரியான திமுகவை வீழ்த்த இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலையானவுடன் கூறினார். ஆனால், அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் டிடிவி தினகரன் அவரது தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால், அதிமுக ஓட்டுகளை பிரிக்கவே சசிகலா திட்டமிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த திட்டத்தை முறியடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திர வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் என்றும் பழனிசாமியின் செயல்திட்டம் வெற்றிபெறும் என்றும் அதிமுகவினர் அடித்துச் சொல்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து வெளிவந்துள்ள சசிகலா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அவர் வெளியில் வந்தவுடன் சில அமைச்சார்களும், பல எம்.எல்.ஏ.க்களும் அவரை சந்திப்பார்கள் என்றும், அதிமுகவில் பெரும் பிரளயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அவர் சிறையில் இருந்து வெளிவந்த முதல் நாளில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று கூறியதால், அவர் மீண்டும் அதிமுகவில் இணையப்போகிறார் என்றும், அமமுக தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணையும் என்றும், இது குறித்து பாஜக இருவருக்கும் இடையில் பேச்சுக்களை நடத்துவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா முதல் நாள் பேட்டிக்குப் பின், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறார். அதிமுகவில் உயர்பொறுப்பில் இருக்கும் யாரும் அவரை சந்திக்கவில்லை. அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ அவரை சந்திக்கவில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான சிவில் வழக்கு ஒன்றை விசாரணைக்கு கொண்டு வருமாறு கேட்டுள்ளார். இதைத் தவிர எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனால், அவர் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கோ, அமமுகவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கோ, பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையின்போது வெளிப்பட்டது. பிரதமரை டெல்லியில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று தெரிவித்தார்.

பிரதமர் சென்னை வந்தபோது பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் கைகோர்க்க வைத்தார். முதலமைச்சரைத் தனியாக சந்தித்துப் பேசினார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியின் பின்னால் பிரதமர் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சசிகலாவை கட்சியில் சேர்க்கவேண்டாம் என்றும், அமமுகவை இணைக்க வேண்டாம் என்றும் முதல்வர் எடுத்துள்ள முடிவை பிரதமரும் ஆதரிக்கிறார் என்பதும் வெளிப்படையாத தெரிந்தது.

பிரதமர் மோடியின் மனநிலையையும் பாஜகவின் நிலைப்பாட்டையும் தெரிந்துகொண்ட அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் சசிகலாவைவிட்டு விலகி நிற்கிறார்கள் என்று கருதப்படுகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் இணைவதோ அமமுகவை இணைப்பதோ சாத்தியமில்லை என்பதை உணர்ந்த சசிகலா அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை யோசித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா வெளியே வருவார் என்றும், பல நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எந்த நிகழ்ச்சியும் அறிவிக்கப்படவில்லை. இருக்கும் இடத்திலேயே அவர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செய்வார் என்று தெரிகிறது. வரும் 2021-தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்று இதுவரை அவர் அறிவிக்கவில்லை.

ஆனால், தினகரன் நேற்று அளித்துள்ள பேட்டியில் அமமுக தனித்துப் போட்டியிடும் என்றும் தனது தலைமையில் கூட்டணி அமைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால், முதலில் கூறிய ஒற்றுமைக்கு கருத்தைக் கைவிட்டு, அதிமுகவின் வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றியடையச்செய்ய சசிகலா முயற்சி செயகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக மொத்த வாக்குகளில் 5.25 வாக்குகளை பெற்றது. போனமுறை கடைசி நேரம் வரை சின்னம் பிரச்சினையாக இருந்தது என்பதால், அதிக வாக்குகளை பெற முடியவில்லை என்று சொல்லும் தினகரன், ஆதரவாளர்கள் இந்த முறை குக்கர் சின்னர் முன்பே கிடைத்துள்ளதாலும், சசிகலா வெளியில் இருப்பதாலும், அதிக வோட்டுகளைப் பெறுவோம் என்று கூறுகிறார்கள். போன முறையே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தை விடவும், சீமானின் நாம் தமிழர் கட்சியைவிடவும் அதிக வாக்குகளை வாங்கிய அமமுக, பத்து சதவீதம் வோட்டுகளைப் பெறுவோம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், தேர்தலுக்குப் பின் தினகரன் ஆதரவாளர்கள் பலர் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாறிவிட்டார்கள். இதனால், அந்தக் கட்சியின் பலம் இரண்டு சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று அதிமுகவினர் கணக்கிடுகின்றனர். தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், முக்குலத்தோர் வாக்குகளில் கொஞ்சம் வாக்குகளை அமமுக வாங்கும் என்றும், அதை ஈடுசெய்யும் வகையில், எடப்பாடி பழனிசாமி அரசியல் வியூகங்களை வகுத்துள்ளார் என்பதை அதிமுகவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் முத்தரையர் சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. முத்தரையர் மாநாட்டில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு என்று தனிவாரியம் அமைக்கப்படும் என்று சொன்னதுடன், பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்டப்படும் என்றும், அவருக்கு இரு இடங்களில் சிலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சசிகலா பிரிக்கும் வாக்குகளை ஈடுசெய்ய முத்தரையர் ஓட்டுகள் பயன்படும் என்ற அரசியல் கணக்கை அதிமுக போட்டு செயலாற்றி வருகிறது.

தென் மாவட்டங்களில் சசிகலா பிரிக்கும் ஓட்டுகளை சரிசெய்ய தேவேந்திரகுல வேளாளர் ஆதரவைப் பெரும் நடவடிக்கைகளை பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து எடுத்துள்ளன. ஏழு பெயர்களில் அழைக்கப்பட்ட பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வாடா மாவட்டங்களிலும், கொங்கு மாவட்டங்களிலும் அமமுகவால் சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே வாக்குகளை வாங்க முடியவில்லை, அதனால், தினகரன் கட்சியால் வட மாவட்டங்களிலும் கொங்கு பகுதியிலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கருதப்படுகிறது.

Thanks to Dailhunt

About Admin

Check Also

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது…!! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster