காவேரிப்பாக்கத்தில் ஆமை வேகத்தில் 6 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது..!!
காவேரிப்பாக்கம் : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகள் சில பகுதிகளில் ஆறு வழிச்சாலையாகவும், சில பகுதிகளில் நான்குவழிச்சாலையாகவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் வரை 4 வழி சாலை வழியாக இருந்து வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளகேட் பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் அடுத்த வாலாஜா டோல்கேட் பகுதி வரை சுமார் 37 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழும்புகிறது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் 6 வழிச்சாலைக்காக தோண்டப்பட்டு பள்ளம் உள்ள பகுதிகளில் தடுப்பு வைக்கப்படாமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் அதிவேகத்தில் வரும் கனரக வாகனங்களில், ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது, அருகே உள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது.
Thanks to Dinakaran