Thursday , February 25 2021
Breaking News
Home / செய்திகள் / ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்..!!

திருப்பத்தூர் : ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உருவெடுத்துள்ளது. இங்கு 30 படுக்கை வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, பாப்பானூர்மேடு, ஜலகன்வட்டம், மிட்டூர், மயில்பாறை, ராஜாபாளையம், பூங்குளம் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் 100 முதல் 150 வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, பூச்சிக்கடி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, காய்ச்சல், தாய்-சேய் நலம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு, இருதயம் தொடர்பான நோயாளிகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனையும், அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா காலத்தில் ஒரே பெண் மருத்துவர் 25க்கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்துள்ளார்.

தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையம், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், சிரஞ்சிகள், குளுக்கோஸ் பாட்டில்கள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஏராளமான சத்து மாத்திரைகள், மருத்துவமனை வளாகத்தில் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ள காட்சி சமூக வளைதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைகண்ட நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து, கிராமமக்கள் கூறும்போது, ‘ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் அங்கேயே தங்கி 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்கள், பூச்சிக்கடி ஆகியவற்றிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அல்லது வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மருந்தாளுனர்கள் உரிய நேரத்தில் வந்து மருந்துகளை வழங்குவதில்லை.

அதேபோல மருத்துவர்களும் அவ்வப்போது விடுப்பில் சென்றுவிடுவதால் இங்குள்ள செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்காததால் காலாவதியாகி தற்போது மருத்துவமனை வளாகத்தில் குப்பைப்போல வீசப்பட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.இதுகுறித்து ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் செல்வியிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதைதொடர்ந்து, திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்திலிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக எந்த புகாரும் இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தப்படும். மருந்து, மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்காமல் கீழே வீசப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், மருந்தாளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அரசு மருத்துவமனையில் ஒரு கருப்பு ஆடு

மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள  காலாவதியான மருந்துகளை அங்கு பணியாற்றும் ஒருவர் இதனை படம் பிடித்து மற்றவர்களிடம் கொடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மருந்துகள் அனைத்தும் எக்ஸ்பைரி தேதி முடிவடைந்து உள்ளதால் அதனை நாங்கள் அப்புறப்படுத்தி உள்ளோம். அதனை படம்பிடித்து வேறுவிதமாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Thanks to Dinakaran

About Admin

Check Also

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: முதல்வர்

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster