Breaking News
Home / இந்தியா / ஐபிஎல் ஏலம்: கோடி கோடியாய் கொட்டிய அணிகள் – ‘வலிமை’ பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் ஏலம்: கோடி கோடியாய் கொட்டிய அணிகள் – ‘வலிமை’ பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் ஏலம்: கோடி கோடியாய் கொட்டிய அணிகள் – ‘வலிமை’ பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ்?

2021 ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு அதிகமாகவே இருந்தது. மேக்ஸ்வெல், மோரிஸ், ஜேமீசன், ஜை ரிச்சர்ட்சன் போன்றவர்கள் 10 கோடி ரூபாய்க்கு மேல் விலைபோயிருக்கின்றனர். மொத்தம் 57 வீரர்கள் 145.3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எப்படி செயல்பட்டன, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்களா, கடந்த ஆண்டு எதிர்பாராத சரிவைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிரச்னைகளை சரிசெய்ததா? அலசுகிறார் எம். பிரதீப் கிருஷ்ணா.

அதிக தொகைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்

ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ் மோரிஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமீசனை 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 2020 சீசனில் ஆடிய வீரர்கள் பலரையும் வெளியேற்றிய பெங்களூரு, 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லையும் வாங்கியது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் இவர்கள் நால்வரும் 10 கோடி ரூபாய்க்கு மேல் விலை போனார்கள்.

இவர்களுக்கு அடுத்து இந்திய வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபோனார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. அந்த நால்வரையும் வாங்கிய பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் இப்படி செலவு செய்வது சகஜம் என்பதால், கௌதமின் தொகை பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், சூப்பர் கிங்ஸின் தேவைகளையும், ஏலத்தில் இருந்த வீரர்களையும் கருத்தில் கொண்டால் அவர்களின் முடிவு சரியானதுதான்.

ஆல்ரவுண்டர்களின் தேவை

ஏற்கெனவே சொன்னதுபோல் இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கே அதிக தேவை இருந்தது. தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள்தான் ஏலம் விடப்பட்டனர். அந்த முதல் செட்டில் ஸ்டீவ் ஸ்மித் தவிர வேறு யாரும் விலைபோகவில்லை. இரண்டாவது செட்டில் ஆல்ரவுண்டர்கள். இம்முறை கேதர் ஜாதவ் தவிர்த்து எல்லோருமே ஐ.பி.எல் அணிகளால் வாங்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், மோரிஸ், ஜேமீசன், ஜை ரிச்சர்ட்சன் என ஹிட்டர்களாக அறியப்படும் பௌலர்களே அதிக விலைக்கும் போனார்கள். ஆல்ரவுண்டர்கள் மீது அவ்வளவு தேவை இருந்தது.

அனைத்து அணிகளுக்கும் ஆல்ரவுண்டர்கள் தேவை இருந்தாலும், தோனியின் அணிக்கு சில கூடுதல் தேவைகளும் இருந்தது. முதலாவது, ஆஃப் ஸ்பின்னர். ஹர்பஜன் சிங்கை விடுவித்ததால், அந்த இடத்தை நிரப்பவேண்டிய தேவை ஏற்பட்டது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களின் சொர்க்க பூமி என்பதால், ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் விளையாடுவது பெரும் பின்னடைவாக அமைந்துவிடும். ஆனால், என்ன பிரச்னையெனில் இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வீரர்களின் தரமான ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லை. ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜெயந்த் யாதவ், வருண் சக்ரவர்த்தி என முன்னணி ஸ்பின்னர்களெல்லாம் வேறு அணிகளில் இருப்பதால், அனுபவ ஸ்பின்னர்கள் கிடைப்பது கேள்விக்குறியாக இருந்தது.

இரண்டாவது தேவை, மிடில் ஆர்டர் ஹிட்டர். கடந்த ஐ.பி.எல் தொடரில் சூப்பர் கிங்ஸுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது இதுதான். கடைசி கட்டத்தில் வேகமாக அடித்து ஆடக்கூடிய வீரர்கள் இல்லாததால், இலக்கை சேஸ் செய்ய முடியாமல் பல போட்டிகளில் தோல்வியடைந்தது சி.எஸ்.கே. தோனிக்கு வயதாகிக்கொண்டே இருப்பதால், நம்பத்தகுந்த ஒரு ஹிட்டர் தேவை.

ஆக, சென்னை அணியின் திட்டம் இதுதான் : அந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு வீரர் – ஆஃப் ஸ்பின் வீசும் ஒரு ஆல்ரவுண்டர். அதனால்தான் மேக்ஸ்வெல்லுக்காக முட்டி மோதிப் பார்த்தது சூப்பர் கிங்ஸ். இதுவரை ஏலத்தில் அவர்கள் அப்படி யாருக்கும் போட்டியிட்டதில்லை. உனத்கட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸோடு போட்டியிட்டதுதான். வெளிநாட்டு வீரர்களுக்கெல்லாம் அதிகம் செலவு செய்திடாத அணி, 14 கோடி ரூபாய் வரை போனது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு ஒரே காரணம், ஆஃப் ஸ்பின் வீசும் ஆல்ரவுண்டர் தேவை.

ஏன் கிருஷ்ணப்பா கௌதமை தேர்வு செய்தது சிஎஸ்கே?

மேக்ஸ்வெல் இல்லை எனும்போதுதான் அதற்கடுத்த ஆப்ஷன்களுக்கு முழு வீச்சில் இறங்கியது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். மேக்ஸ்வெல் இல்லையெனும்போது அவர்கள் முன் இருந்தது மொயீன் அலிதான். ஏலத்திற்கு முன்பு, சென்னை அணி ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கவேண்டும் என்று தன் கருத்தைப் பதிவிட்டார் இர்ஃபான் பதான். ஆனால், மொயீன் அலிதான் அவர்களுக்கு சரியான தேர்வு என்று அப்போதே தீர்க்கமாகக் கூறினார் கௌதம் கம்பீர். ஏனெனில், மேக்ஸ்வெல் போன்று சி.எஸ்.கே-வின் இரண்டு தீர்வுகளையும் அவர் முழுமையாக நிரப்புவார். இருவருக்குமான ஒரு வித்யாசம், மொயீன் அலி இடது கை பேட்ஸ்மேன் என்பது மட்டும்தான். பெங்களூரு அணிக்காக சில அதிரடி இன்னிங்ஸ்கள் ஆடி நிரூபித்திருக்கிறார். இரண்டாவது டெஸ்டின் கடைசி கட்டத்தில் அவர் காட்டிய அதிரடி ஆட்டமுமே அவர் திறனை காட்டும். அதனால்தான் பஞ்சாப் அணியோடு போட்டி போட்டு அவரை ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே.

என்னதான் மொயீன் அலியை வாங்கியிருந்தாலும், ஒரேயொரு ஆஃப் ஸ்பின்னரோடு விளையாடிவிட முடியாது. அதுமட்டுமல்லாமல், 4 வெளிநாட்டு வீரர்களே ஆடமுடியும் என்பதாலும், அதனால் மொயீன் அலியை எல்லா போட்டிகளிலும் களமிறக்க முடியாது என்பதாலும், ஒரு இந்திய ஆஃப் ஸ்பின்னர் இருப்பதும் மிக அவசியம். அந்த இடத்தை நிரப்பக்கூடிய ஒரு ஆளாகத்தான் கிருஷ்ணப்பா கௌதம் தெரிந்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளோடு போட்டியிட்டு அவரை ‘யெல்லோ ஆர்மி’ உறுப்பினர் ஆக்கியது சி.எஸ்.கே.

அவர்களின் பிரதான தேவைகளை நிரப்பிவிட்டதால், அடுத்ததாக சடேஷ்வர் புஜாரா, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை அடிப்படை விலையில் வாங்கியது சி.எஸ்.கே. இந்த ஏலத்தைப் பொறுத்தவரை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள். பிரதான இலக்கான மேக்ஸ்வெல்லைத் தவறவிட்டாலும், இரண்டாவது சாய்ஸ் வீரர்களை வாங்கியிருப்பதால், நிச்சயம் அவர்கள் நிர்வாகம் திருப்தியாகவே இருக்கும்.

சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த ஏலத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் அணியென்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ். எப்போதுமே அவர்களின் பேட்டிங்குக்கும் பௌலிங்குக்கும் பெரிய இடைவெளி இருக்கும். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பலுவை சுமக்க ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளர் அங்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், எப்போதும் பேட்ஸ்மேன்கள் அதிகமாகவே இருப்பார்கள். அந்த சிக்கலை இம்முறை அந்த அணி நிர்வாகம் சரிசெய்திருக்கிறது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்து, சஞ்சு சாம்சனை கேப்டனாக்கியவர்கள், இன்று கிறிஸ் மோரிஸை வாங்கி பந்துவீச்சு பிரச்னையை சரிசெய்திருக்கிறது.

ஆர்ச்சர், மோரிஸ், தெவேதியா, ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி என பிளேயிங் லெவனில் ஐந்து பௌலர்கள் சிறப்பாகப் பொருந்திப்போவார்கள். இன்று இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் தூபேவையும் வாங்கியிருக்கிறார்கள். அவர், ஸ்டோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருப்பதால், பௌலர்களுக்கு அங்கு பஞ்சமே இல்லை. தூபே, தெவேதியா, மோரிஸ், ஆர்ச்சர் என அவர்களின் மிடில் ஆர்டர், லோயர் மிடில் ஆர்டர் முழுவதும் ஹிட்டர்கள் இருப்பதால், பேட்டிங்கும் பலமானதாகவே இருக்கிறது.

பிளேயிங் லெவன் தாண்டி, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மில்லர், ஆண்ட்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் என அணி மிகவும் பலமாக இருக்கிறது. இதற்கு முன் இந்திய பௌலர்களும் அவர்களுக்குக் கொஞ்சம் சிக்கல் தருவார்கள். அதை சரிசெய்ய சேத்தன் சகாரியா, ஆகாஷ் சிங் போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, முன் எப்போதையும் விட இம்முறை பலமாக இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டெல்லி அணியின் மோசமான முடிவுகள்

இந்த ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸின் செயல்பாடு சுமார்தான். சில நல்ல முடிவுகள் எடுத்தாலும், சில மோசமான முடிவுகளையும் எடுத்திருக்கிறார்கள். 1 கோடி ரூபாய்க்கு உமேஷ் யாதவை வாங்கியது அட்டகாசமான விஷயம். அதேசமயம், தேவையே இல்லாமல் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கியிருக்கிறார்கள். 2.2 கோடி ரூபாய்க்கு ஸ்டீவ் ஸ்மித் என்று யோசித்தால், சிறப்பான முடிவாக தெரியும். ஆனால், ஸ்மித்தின் தேவை அனு அளவும் கூட அந்த அணியில் இல்லை. தவான், பிரித்வி ஷா, ரஹானே, ஸ்டாய்னிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹிட்மேயர் என டாப்-3 பொசிஷனில் ஆடும் வீரர்கள் ஏற்கெனவே அணியில் 6 பேர் இருக்கிறார்கள். அதனால், ரஹானே போன்ற ஒரு வீரரே பல போட்டிகளில் வெளியே அமர்ந்திருந்தார். அப்படியிருக்கையில் எதற்காக ஸ்டீவ் ஸ்மித்?!

டாம் கரண், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களுக்கு செலவு செய்த தொகைக்குப் பதிலாக, பியூஷ் சாவ்லாவுக்கு இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். அமித் மிஷ்ராவுக்கு ஒரு நல்ல பேக் அப் ஆப்ஷனாக இருந்திருக்கும். இருந்தாலும், சாம் பில்லிங்ஸ், மணிமாறன் சித்தார்த் என ஒருசில நல்ல வியாபாரமும் செய்திருக்கிறது கேபிடல்ஸ்.

பஞ்சாப் அணியின் பிரமிக்க வைக்கும் பேட்டிங் ஆர்டர்

பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் எப்போதுமே ஏலத்துக்குப் பிறகு பலமான அணியாகவே தெரியும். அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்குவார்கள். இம்முறையும் அதுவே நடந்திருக்கிறது. மேக்ஸ்வெல், கைல் ஜேமீசன், டேன் கிறிஸ்டியன் போன்ற வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முதலீடு செய்திருக்கிறது ஆர்.சி.பி. சையது முஷ்தாக் அலி தொடரில் அதிவேகமாக சதமடித்து அசத்திய முகமது அசாருதீன், கே.எஸ்.பரத், சச்சின் பேபி என உள்ளூர் பேட்ஸ்மேன்கள் நிறைய இருந்தாலும், அணியின் நம்பர் 6 இடத்துக்கு அவர்களால் நியாயம் சேர்க்க முடியுமா என்பது சந்தேகமே. அதுவும், ஓப்பனருக்கான இடமும் பெங்களூரு அணிக்கு சிக்கலாக அமையலாம். மற்றபடி, மேக்ஸ்வெல் இருப்பதால், கோலி, டி வில்லியர்ஸ் மீதான நெருக்கடி குறையும்.

பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் ஆர்டர், இந்த ஏலத்துக்குப் பிறகு பிரமிக்கும் வகையில் இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலனை, யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது அந்த அணி. சையது முஷ்தாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது கிங்ஸ். கடந்த ஆண்டு, அவர்களின் மிடில் ஆர்டர் சீரான செயல்பாட்டைக் கொடுக்காததால் அந்த அணி பெருமளவு தடுமாறியது. ஷாரூக் அந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு. கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், டேவிட் மாலன் / கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண், ஷாரூக் கான் என அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிரட்டலாக இருக்கிறது.

கைல் ஜேமீசன், அவர்களின் பந்துவீச்சு சிக்கல்களுக்கான பதிலாக அமைவார். ஷேன் வார்னேவின் நன்மதிப்பைப் பெற்ற ரைலி மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது கும்பிளே அண்ட் கோ. அவரோடு, கிறிஸ் ஜோர்டன், ஃபேபியன் ஆலன், மோய்சஸ் ஹென்ரிக்ஸ் என ஆல்ரவுண்டர்கள் அணிவகுத்து நிற்பதால், வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் அவர்களுக்குப் பிரச்னையே இருக்காது. இந்த சீசன் அவர்கள் நிச்சயம் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார்கள்.

ஏலத்தால் ஏற்படும் தாக்கம்

மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பெரிய அளவில் வீரர்களை வாங்கவில்லை. நிரப்பவேண்டிய இடங்களுக்கான வீரர்களை சரியான தொகைக்கு வாங்கின. பேட்டின்சன், மெக்லனகன், ரூதர்ஃபோர்ட் ஆகியோரின் இடங்களை ஆடம் மில்ன், மார்கோ யான்சன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் கொண்டு நிரப்பியது மும்பை. அனுபவ வீரர் பியூஷ் சாவ்லாவை வாங்கியிருப்பது, அவர்களின் சுழற்பந்துவீச்சை பலப்படுத்தும்.

ஷகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங், பென் கட்டிங் என அனுபவ வீரர்களை குறைந்த தொகைக்கு எடுத்திருக்கிறது நைட்ரைடர்ஸ். மூன்றே மூன்று வீரர்களை மட்டும் வாங்கியிருந்தாலும், ஒரு நல்ல முன்னேற்றம் காட்டியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், கேதர் ஜாதவ், ஜெகதீசா சுசித் என அணியை பலப்படுத்தியிருக்கிறார்கள்.

போட்டியின்போது எடுக்கப்படும் முடிவுகள், அன்றைய செயல்பாடுகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்றாலும் ஏலத்தின் செயல்பாடு ஓர் அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய செயல்பாடு எந்தெந்த அணிக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை இந்த ஐ.பி.எல் சீசன் தொடங்கியதும் பார்ப்போம்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..!! சென்னை: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster